October 6th, 2015 | : செய்திகள் |

பிரான்சிற்கு பெருமைசேர்க்கும் சுயஸ் கால்வாய்

சுயஸ் கால்வாய் 2 ஆகஸ்ட் 6ம் திகதி எகிப்தில் கோலாகலமாகத் திறந்து வைக்கப்பட்டது. திறப்பு விழாவில் கெளரவ விருந்தினராக பிரான்ஸ் அதிபர் பிரான்சுவா ஹொலந் கலந்து சிறப்பித்துள்ளார். எகிப்திற்கும் பிரான்சிற்கும் இடையிலான நட்புறவின் வெளிப்பாடாகவும், பிரான்சிற்கும் சுயஸ் கால்வாயின் தோற்றத்திற்குமான நீண்ட வரலாற்றின் கெளரவமாகவும் அதிபர் அழைக்கப்பட்டு கெளரவிக் கப்பட்டுள்ளார்.

உலக வர்த்தகத்தில் முக்கிய இடம் வகிக்கும் சுயஸ் கால்வாயின் தோற்றம் 1859ல் ஆரம்பமாகி 10 வருட கட்டுமானங்களுக்குப் பின் 1869ல் திறந்து வைக்கப்பட்டது. இத்திட்டத்தை முன்னின்று வழிநடத்தி செயற்படுத்தியது பிரான்சும் பிரான்சின் கட்டுமானத் துறையினருமேயாகும்.

ஆரம்பத்தில் ஐரோப்பாவிற்கும் ஆசியாவிற்கும் இடையிலான வர்த்தகக் கப்பல் போக்குவரத்து ஆபிரிக்காக்கண்டத்தைச் சுற்றிப் பல ஆயிரம் கிலோமீற்றர்கள் பயணித்தே அடையமுடிந்தது. மத்தியதரைக்கடலையும் செங்கடலையும் குறுக்கு வெட்டாக இணைக்கும் சுயஸ் கால்வாயின் தோற்றத்துக்கு பின்னர் இத்தூரம் சரிபாதியாகக் குறைக்கப்பட்டது.

193 கிலோமீற்றர் நீளமான இக்கால்வாயை ஒரு கப்பல் 18 மணிநேரப்பயணத்தில் கடக்கும். நாளுக்கு 49 கப்பல்கள் சுயஸ் கால்வாய் வழியாகப் பயணிக்கின்றன. தற்போது புதிய கட்டுமானங்களுக்குப் பின்னர் நாளுக்கு 97 கப்பல்கள் பயணிக்க முடியும். அத்துடன் பயண நேரம் 11 மணி நேரங்களாகவும் மாற்றம் பெற்றுள்ளது. ஏதோவொரு காரணத்துக்காக சுயஸ் கால்வாயில் ஒரு நாள் போக்குவரத்து தடையானால் எகிப்து 62 மில்லியன் யூரோக்களை இழக்கின்றது.

1981ம் ஆண்டு முதல் ஆட்சியிலிருந்த Hosni Moubarak ன் ஆட்சியை எதிர்த்து 2011ல் வெடித்த மக்கள் புரட்சியைத் தொடர்ந்து அரசியல் மாற்றங்கள் உள்நாட்டு மோதல்கள் எனப்பல அவலங்களைக் கடந்து இன்று எகிப்து நிமிர்ந்து நிற்கின்றது.

2014ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட சுயஸ் கால்வாய் 2 திட்டம் 8 மில்லியாட் யூரோ செலவீனத்தில் ஒரு வருட கட்டுமானங்களுக்குப் பின் இன்று பெருமையாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது எனக்குறிப்பிட்ட பிரான்ஸ் அதிபர் இத்திட்டம் உலக வர்த்தகத்துக்கு ஒரு வரப்பிரசாதம் எனவும் இத்திட்டத்தின் மூலம் பிரான்சும் கெளரவிக்கப்பட்டுள்ளமை பிரான்சிற்கும் பெருமையே எனவும் தெரிவித்துள்ளார்.

எகிப்தின் வருவாயில் முக்கிய பங்காற்றுவது சுயஸ் கால்வாய் போக்குவரத்தேயாகும். வருவாயாக இருந்த 4.17 மில்லியாட் யூரோக்கள் 2023ம் ஆண்டில் 11.7 மில்லியாட் யூரோக்களாக உயரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் கப்பல் போக்குவரத்துத்துறையினருக்கும் செலவீனங்கள் குறைக்கப்படவுள்ளது. இரண்டாவது கால்வாயின் தோற்றம் போக்குவரத்து நெரிசலைக் குறைத்து சீரான> வேகமான போக்குவரத்துக்கு வழிசெய்யவுள்ளது. இதன் மூலம் இன்று ஒரு கப்பலின் ஒரு நாள் செலவீனமான 46000 யூரோக்களில் 13700 யூரோக்களை சிக்கனப்படுத்த முடியும் எனக் கப்பல் போக்குவரத்து நிர்வாகமும் நிம்மதிப்பெருமூச்சு விடுகிறது.