February 9th, 2019 | : செய்திகள் |

2019 ஜனவரி முதல் ஏற்பட்டுள்ள முக்கிய மாற்றங்கள் :

ஒவ்வொரு வருட ஆரம்பங்கள் போல் 2019ம் ஆண்டும் பல மாற்றங்களுடன் ஆரம்பமாகியுள்ளது.

ஜனவரி 1ம் திகதி முதல் அடிப்படை சம்பளமான (SMIC) 1.5 சதவீத உயர்வைப் பெறுகின்றது.
ஒரு மணிநேரத்திற்கு 9.88 யூரோவிலிருந்து 10.03 யூரோவாக உயர்வு பெறுகின்றது. 35 மணிநேர வேலைக்கு மாதாந்த வருமானமாக 1521.22 யூரோக்களாக மாறுகின்றது.

ஓய்வூதியம் பெறுவோருக்கு மாதத்திற்கு 2000 யூரோவிற்கு குறைவாக ஓய்வூதியம் பெறுவோருக்கு அரசால்
அறிவிக்கப்பட்ட சமூக அறவீடு உயர்வு விலக்கப் பட்டுள்ளது. இம்மாற்றம் முதல் 6 மாதங்களுக்கு நடைமுறைப்படுத்தப்படாது. எனினும் 6 மாதங்களுக்கு பின்னர் கூடுதலாக அறவிடப்பட்ட தொகை மீள வழங்கப்படும்.
இவ்விரண்டு மாற்றங்களும் «Gilets Jaunes» புரட்சிகளுக்குப் பின்னர் அனுமதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

முதியவர்களுக்கான சமூக கொடுப்பனவுகள் (ASPA) Allocation de solidarité aux personnes âgées 35 யூரோவால் உயர்ந்து 826.20 யூரோவாக மாற்றம் பெற்றுள்ளது

வீட்டு வரி (Taxe d’habitation) அதிபர் மக்ரோனால் அறிவிக்கப்பட்டது போன்று இந்தவருடமும் 30 சதவீத
கழிவு கிடைக்கப்பெறவுள்ளது. 2020ம் ஆண்டில் முற்றிலுமாக இல்லாமல் போகும்.

வேலை நேரத்தை விட கூடுதல் நேரம் வேலை செய்தால் (Overtime) கிடைக்கும் கூடுதல் ஊதியத்திற்கு எந்தவித வரிகளும் செலுத்தத் தேவையில்லை. இம்மாற்றம் செப்டெம்பர் 2019 முதலே அமுல்படுத்தப்படவிருந்தது மஞ்சள் சட்டை போராட்டங்களால் ஜனவரி முதல் அமுலுக்கு வருகின்றது. இம்மாற்றம் அரச மற்றும் தனி யார் ஊழியர்கள் என அனைவருக்கும் பொருந்தும்.


வருமானவரி : அனைத்து ஊதியம் பெறுவோருக்கும் வருமானவரி அந்தந்த மாதமே அவர்களுடைய அந்த மாதத்திற்கான சம்பளத்திலிருந்து நேரடியாக எடுக்கப்படும்.

எரிவாயு விலை 1.9 சதவீதத்தால் குறையவுள்ளது. சமையலுக்காக மட்டும் எரிவாயுவை உபயோகிப்போருக்கு 0.6 சதவீதமும், சமையலுக்கும் சுடுதண்ணீருக்கும் உபயோகிப்போருக்கு 1.2 சதவீதமும், சமையல், சுடுதண்ணீர் மற்றும் வெப்பமூட்டிக்காக எரிவாயுவை உபயோகிப்போர் 2 சதவீத விலைக்குறைப்பையும் பெறவுள்ளனர். எரிவாயு டிசம்பர் மாதத்தில் 2.4 சதவீத விலைக்குறைப்பைப் பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விலைக்குறைப்புகள் அனைத்தும் நவம்பரில் 5.8 சதவீத உயர்வு, ஒக்டோபர் 3.25 சதவீத உயர்வு, செப்டெம்பர் 0.9 சதவீத உயர்வுகளுக்குப் பின்னர் போரா டிப் பெறப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

2019ல் மின்சாரக்கட்டணங்கள் பாரிஸ் வாழ் மக்களுக்கு 2.3 சதவீத உயர்வை எட்டுகின்றது.

பிரான்சில் பல ஆயிரம் வாகனங்கள் காப்பீடுகளின்றி (Assurance) பாவனையில் உள்ளனவாம்.
இதுவரையிலும் இல்லாதவாறு பிரான்ஸ் காவல் துறையினருக்கு காப்பீட்டு நிறுவனங்களின் முகவர் கணக்குகளை கண்காணிப்பதற்கான அனுமதி வழங்கப்படுகின்றது.
காப்பீடு செய்யப்படாத வாகனம் 3750 யூரோ வரையான அபராதம் பெற வாய்ப்புள்ளது. இன்னும் கூடுதலாக வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டு வாகன ஓட்டுனர் உரிமமும் பறிமுதல் செய்யப்பட வாய்ப்புண்டு

புகைப்பிடிப்பவர்களுக்கு : 2018ம் ஆண்டில் இரண்டு முறை விலையுயர்வைப் பெற்ற சிகரெட் பக்கற்றுகள் 2019ம் ஆண்டில் ஏப்ரலிலும், நவம்பரிலும் இரண்டு முறை விலையுயர்வைப் பெறவுள்ளன. ஒவ்வொரு முறையும் 0.50 யூரோவால் விலையுயர்வு பெறும்.

தபால் முத்திரைகள் : அடிப்படை முத்திரையின் விலை 10 சதவீத உயர்வைச் சந்திக்கின்றது.

இவை தவிர பிரான்சில் 2019ம் ஆண்டில் சம்பளங்கள் 1.5 முதல் 2.5 சதவீதமான உயர்வை பெறுவதற்கான சாத்தியக்கூறுகளும் உள்ளன என Deloitte ஆய்வகம் தெரிவித்துள்ளது.